search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா சுப்பிரமணியன்"

    • 194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா தலைமையில் நடைபெற்றது.
    • தி.முக. பிரதிநிதிகள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194- வது (அ) வட்ட தி. மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈஞ்சம்பாக்கம் 194 - வது (அ)வட்ட செயலாளர் குங்பூ எஸ். கர்ணா,194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும் 15 - வது மண்டல குழு தலைவருமான வி.இ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 160 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ. 3000 ஊக்கத்தொகை, 2500 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பை, 25 சாலை வியாபாரிகளுக்கு நிழற்குடை, 5 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்,5 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மாவட்ட துணை செயலாளரும் சென்னை மாநகராட்சி கல்வி குழு தலைவருமான த.விசுவநாதன், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் தாஸ், ராஜா, தியாகராஜன் மற்றும் வட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஜி.சங்கர், எ.முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.
    • உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.

    உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித அடைப்பும் இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

    • அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
    • உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.
    • 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும்.

    சென்னை:

    சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் 5,09,664 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 83,430 பேர் துணை சுகாதார நிலையங்களிலும் என மொத்தம் 5,93,094 பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நகர்புறங்களில் செயல்படுத்தும் வகையில் பரிசோதனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

    30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டுபிடிக்க ஸ்டிப் பயன்படுத்துவது போல் சிறுநீரில் இந்த ஸ்டிப்பை போட்டால் ஆல்புமின் அளவை காட்டி விடும்.

    ஆல்புமின் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் செயலிழப்பதாக அர்த்தம். இதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

    சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • மாணவனுக்கு கையில் அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
    • 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    நாங்குநேரி:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.

    மேலும், மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • தமிழ் நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.
    • ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2008-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ந் தேதி அன்று தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    பின்னர் 2015-ம் ஆண்டு தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் , தமிழ் நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி மதுரை மற்றும் கோயம்புத்தூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உரிமம் வழங்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.

    இந்த ஆணையம் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளில் மொத்த உறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை-1,705 பேர்.

    இதில், இதயம்-786, நுரையிரல்-801, கல்லீரல்-1565, சிறுநீரகம்-3046, கணையம்-37, சிறுகுடல்-6, வயிறு-2, கைகள்-4 என உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 6247 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 2,500 கண்களும் தானமாக பெறப்பட்டு உள்ளது.

    தமிழ் நாட்டில் மட்டும் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 22 லட்சம் ருபாய் வரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் 2014 முதல் தற்போது வரை மட்டும் 370 நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர்.

    நோயாளிகளின் பதிவு மற்றும் உடல் உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்காக விடியல் என்ற தானியங்கி இணையதளம் மற்றும் செயலியை இந்தியாவிலேயே முதன் முறையாக 13.8.2021 அன்று தமிழக அரசு தொடங்கி வைத்தது. இந்த செயலியினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிப்படையாகவும் மூப்பின் அடிப்படையிலும் நோயாளிகளுக்கு உறுப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
    • உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

    உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.

    உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.

    இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.

    ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.

    இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

    ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.

    இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார். 

    • மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
    • தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    ஆவடி அருகே அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் விழா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.கணபதி, அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் அ.ம.துரைவீரமணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் அண்ணா சாலை வரை ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.54 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கேடயம், விலையில்லா மிதிவண்டி ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மேலும் நல்லாசிரியர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்திரா, முதன்மைக்கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், எம்.எல். ஏ.க்கள் கோ.தளபதி புதூர் பூமிநாதன் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

    தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சமையல் தேவைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயோ கேஸ் மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

    தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவே இருந்துள்ளது.
    • தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

    சென்னை:

    ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (32). இவரது மனைவி அஜிஷா. இவர்களது 1 1/2 வயது குழந்தை முகமது மகிர்.

    இந்த குழந்தைக்கு தலையில் நீர் கட்டியதால் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தலையில் ஆபரேசன் நடந்துள்ளது.

    இதையடுத்து குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் போடப்பட்டதும் கை கருத்துள்ளது. டாக்டர்கள் பரிசோதித்ததில் கை ரத்த ஓட்டம் இல்லாமல் அழுகிப்போனதால் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கை அகற்றப்பட்டது. செவிலியரின் கவனக்குறைவால் தான் கை அகற்றப்பட வேண்டியதாயிற்று என்று புகார் கூறினார்கள்.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவே இருந்துள்ளது. மருத்துவ துறையின் கவனக்குறைவால் பிரச்சினை ஏற்பட்டதா? என்று கண்டறிய 3 டாக்டர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இந்த குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் கிடைத்துவிடும். கவனக்குறைவு இருந்தது தெரியவந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. பொதுமக்களும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    டெங்கு வரவே வராது என்று சொல்ல முடியாது. பதற்றம் அடைய வேண்டியதில்லை. கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் மிகவும் குறைந்துவிட்டது. இறப்புகள் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது.
    • கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×